வண்ணநிலவன், சமகால தமிழ் இலக்கியத்தின் அரிய சாதனையாளர்களில் ஒருவர். 1949 டிசம்பர் 15 அன்று திருநெல்வேலியில் பிறந்தார். தந்தை உலகநாதன், தாய் ராமலட்சுமி. வண்ணநிலவனின் இயற்பெயர் உ.நா.ராமச்சந்திரன். ‘கண்ணதாசன்’, ‘கணையாழி’, ‘அன்னைநாடு’, ‘புதுவை குரல்’, ‘துக்ளக்’, ‘சுபமங்களா’ ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றி உள்ளார். குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள், நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஆறு நாவல்கள், முந்நூறுக்கும் மேல் கட்டுரைகள் என நிறைய எழுதியுள்ளார். ‘கடல்புரத்தில்’ நாவலுக்காக இலக்கியச் சிந்தனை விருது ‘தர்மம்’ சிறுகதைத் தொகுப்புக்காக தமிழக அரசின் சிறந்த நூல் விருது புதுடெல்லி ராமகிருஷ்ணா ஜெய் தயாள் மனிதநேய விருது, ‘சாரல்’ இலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார். ‘கடல்புரத்தில்’ சென்னை தொலைக்காட்சியில் பதிமூன்று வாரத் தொடராக ஒளிபரப்பானது. ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் மூன்று வசன கர்த்தாக்களில் ஒருவராகப் பணியாற்றினார். வண்ணநிலவன் மனைவி பெயர் சுப்புலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.